சேலம்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக சேலத்தில் மாநில தலைவர் நாக அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்தமாதம் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அதிமுக தேர்தலில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாநிலத் தலைவர் நாகா அரவிந்தன் தெரிவித்தார்.
மேலும் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யவும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 15 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது மாநில நிர்வாகிகள் ஓசோ முரளி, வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.