திண்டுக்கல்:
வேடசந்தூரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஓடையில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில் கடந்த மாதம் புதியதாக சாக்கடை அமைக்கப்பட்டது. இந்த சாக்கடையில் கோழி கறிக்கடை கழிவுகளை கொட்டுவதால் சாக்கடை அடைத்து கொண்டு கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், புழுக்கள் அதிக அளவில் உள்ளதாகவும், கடைகளில் வியாபாரம் வாங்க வருபவர்கள் துர்நாற்றம் தாங்காமல் வாங்காமலேயே சென்று விடுவதாகவும் அப்பகுதி வியாபாரிகள் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாக்கடை சீர் செய்யப்படும் என தெரிவித்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த மறியலின் காரணமாக அரை மணி நேரம் மார்க்கெட் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின் மேரி உடனடியாக பேரூராட்சி அதிகாரிகள் ஊழியர்களுடன் வந்து ஐந்து கோழிக்கறி கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின் மேரி கூறுகையில், கோழிக்கழிவுகளை அகற்றுவதற்காக தனியாக ஒரு வாகனம் மூலம் ஒரு நாளைக்கு மூன்று முறை சென்று கழிவுகளை வாங்கிச் செல்கின்றோம். அப்படி இருந்தும் கோழிக்கறி கடைக்காரர்கள் சாக்கடையில் கொட்டி விடுகிறார்கள். சாக்கடையில் கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.