புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தொடங்கிய தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்ச ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககமும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் தொடங்கியது.
வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து மாணவ மாணவிகளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டனர்.
கல்வித்துறை ஆணையர் மற்றும் செயலர் ஜவஹர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி மற்றும் துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த இடைநிலை மற்றும் உயர்நிலை பிரிவுகளில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தனிப் பிரிவில் 80 படைப்புகளும், குழுப்பிரிவில் 52 படைப்புகளும், ஆசிரியர் பிரிவில் 58 படைப்புகளும் என மொத்தம் 190 அறிவியல் மாதிரிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
காலையில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பார்வையிட அனுமதியும், மாலை 4.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாலையில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவானது பிள்ளைகள் மனதில் உள்ளார்ந்த அறிவியல் சார்ந்த ஆக்கத்தையும், சுற்றுப்புறத்தை ஆராயும் ஆர்வத்தையும் வளர்ந்ததோடு பல்வேறு பள்ளிகளையும் கல்வியாளர்களையும் இங்கே ஒருங்கே இணைத்தது விழாவின் சிறப்பாகும்.