வந்தவாசி:
வந்தவாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, கோட்டை மூலை, தேரடி, 5 கண் பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வந்தனர்.
இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வியாபாரிகளுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய் துறை, நகராட்சி மற்றும் காவல்துறை, உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது தேரடி பகுதியில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களும்,
கோட்டை மூலை பகுதியில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு பகுதியிலும் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடத்தை விட்டுவிட்டு மற்ற இடங்களில் ஆக்கிரமிப்பு பணிகளை தொடர்ந்து செய்தனர்.