வந்தவாசியில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் வேலு என்பவரின் வீட்டில் ஹான்ஸ் கூலிப் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கீழ் கொடுங்காலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போலீசார் மருதாடு கிராமத்தில் உள்ள வேலுவின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது 28 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூல்லிப் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், வந்தவாசி சீதாராமய்யர் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவர்தான் பெங்களூரில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய மருதாடு கிராமத்தில் மறைத்து வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல் வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் சீதாராமய்யர் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மால் சிங் என்பவரின் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது பத்து மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூலிப் குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் 10 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மால் சிங், மற்றும் விக்ரம் சிங், மருதாடு வேலு ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மூட்டை மூட்டைகளாக 38 மூட்டைகள் ஹான்ஸ் கூல்லிப் குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களாக வந்தவாசி மற்றும் கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில நபர்கள் தடைசெய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கைது செய்யபடுவது தொடர்ந்து வருகிறது.