பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வழி தெரியாமல் அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்டு ஓய்வு தாசில்தார் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று காலை வடகரை கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர், வழி தெரியாமல் அழுது கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த குடிமகன் ஒருவர் அவரிடம் ஆறுதல் கூறி டீ வடை வாங்கி கொடுத்துள்ளார். அங்கேயே நிற்கும்படி கூறிவிட்டு மீண்டும் மது அருந்த சென்று விட்டார்.
அந்த மாணவி அங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்த ஓய்வு பெற்ற தாசில்தார் மகேஸ்வரன்,அந்த மாணவியிடம் பேசி விவரத்தை அறிந்து உடனே அருகில் உள்ள பெரம்பலூர் புற காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ ஆனந்தனிடம் ஒப்படைத்தார்.
பின்னர், மாணவிக்கு ஆறுதல் கூறி, காலை உணவு வாங்கி கொடுத்த போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவு அலுவலர்கள், மாணவியை மீட்டு சென்று விசாரணை மேற்கொண்டதில் தாயாருக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அதை பார்க்க பசும்பலூர் செல்ல பெரம்பலூர் வந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அந்த மாணவிக்கு அறிவுரை கூறிய உறவினர்களை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர்.
குடிகாரனிடமிருந்து சிறுமியை மீட்டு போலீசில் ஒப்படைத்த ஓய்வு பெற்ற தாசில்தார் மகேஸ்வரனை பலரும் பாராட்டினர்.