திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் திருவிக அரசு அறிவியல் கலைக்கல்லூரியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 150-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 103 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அது வரை நீதிமன்ற ஆணைப்படி ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.