குடியரசு தினத்தை அவமரியாதை செய்யும் ஆவின் நிர்வாகம்-பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.

 

 

தேசிய தினங்களை புறக்கணித்து (குடியரசு தினத்தை) அவமரியாதை செய்யும் ஆவின் நிர்வாகம், வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு எனபால் முகவர்கள் சங்கம் கண்டனம். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்

கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்கும் முன்பு வரை இருந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியிலும் சரி, அதற்கு முன்பிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் சரி முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கும், மும்மதங்களைச் சேர்ந்த முக்கியமான பண்டிகைகள் சிலவற்றுக்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு புறக்கணித்து வருவது ஆட்சியாளர்களின் அழுத்தத்தினாலா..? அல்லது அவர்களின் மனதை குளிர்விப்பதற்காகவா..? எனத் தெரியவில்லை.

ஏனெனில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் ஆவின் நிர்வாகம் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக (2023-2025) ஆவின் பால் பாக்கெட்டுகளில் இந்திய குடியரசு தின வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்திருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மதசார்பற்ற கூட்டணி, மதச்சார்பற்ற கட்சி என போலி முகத்திரையை போட்டுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் ஆவின் வரலாற்றில் இல்லாத, வழக்கத்திற்கு எதிர் மாறாக ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தியை கடந்த நான்கு ஆண்டுகளாக (2021-2024) வெளியிட்டு வரும் ஆவின் நிர்வாகம் குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக (2022-2025) தவிர்த்து வருவது கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கு அழகல்ல என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் துறை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனதை குளிர்விக்க, அவருக்கு ஐஸ் வைத்து காக்கா பிடிப்பதற்காக டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கி தொடர்ந்து ஒரு வார காலம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டதை ரசித்த ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்த நம் தேசத்தின் குடியரசு, சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் ஆவின் நிர்வாகம் புறக்கணிப்பு செய்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்த போதும் அதுகுறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பது தேசியத்தை ஆவின் நிர்வாகம் புறக்கணிப்பதை ஆட்சியாளர்கள் ஆதரிப்பதாகவே தோன்றுகிறது.

மேலும், கடந்தாண்டு இந்திய சுதந்திர தினத்தன்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி இடம் பெறாதது குறித்து நிர்வாக இயக்குநர் டாக்டர் சு.வினித் ஐஏஎஸ் அவர்கள் மக்கள் கோரிக்கை அடிப்படையில் பரீசீலிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் சமூக வலைதள ஊடகங்களில் மட்டும் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் போது பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடத் தொடங்கிய காலத்திலிருந்த நடைமுறையை நிறுத்தியதை மீண்டும் தொடர ஆவின் நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸ் அவர்களுக்கு தயக்கம் ஏன்..? என்பது புரியாத புதிராகவும், விடை தெரியாத மர்மமாகவும் இருக்கிறது.

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த, இந்தியாவில் மக்களாட்சி மலர்ந்த நாளான ஜனவரி 26ம் தேதியை 1950ம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல ஆண்டுகளாக ஆவின் பால் பாக்கெட்டுகளில் குடியரசு தினம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு வரும் நடைமுறையை புறக்கணித்து வருவது என்பது இந்திய குடியரசு தினத்தை ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு அவமரியாதை செய்து வருகிறதோ..? என்கிற சந்தேகம் எழுவதோடு, தொடர்ந்து நான்காம் ஆண்டாக (2022-2025) தமிழ்நாட்டில் மாநில ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிர்வாகத்திற்கும் திராவிடம் என்றால் தேவாமிர்தமாக இனிப்பதும், தேசியம் என்றால் எட்டிக்காயாக கசப்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க
நிறுவனரும் மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *