பத்திரிக்கையாளர் செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்புவது ஏன்?
பத்திரிக்கையாளர்களின் செல்போனில் உள்ள பிற தரவுகளை கைப்பற்றி கண்காணிக்க திட்டமா?
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் முதல் தகவல் அறிக்கை மாணவியின் அடையாளங்களுடன் வெளியானது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியை அவமதிக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கை பதிவிடப்பட்டதற்கு ஏற்கனவே நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய தகவல் மையம் பராமரிக்கும் சிசிடிஎன்எஸ் வலைப் பின்னலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காரணம் என காவல்துறை தரப்பில் விளக்கம் கூறப்பட்டாலும், வலை பின்னலில் பதிவேற்றப்பட்ட முதல் தகவல் அறிக்கை எல்லோரும் பார்க்கும்படி இருக்கிறதா? பிளாக் செய்யப்பட்டுள்ளதா? என்பதை காவல்துறை பல மணி நேரம் கண்காணிக்காமல் விட்டதும் ஒரு முக்கிய காரணம்.
அது மட்டும் அல்லாமல் சிசிடிஎன்எஸ் வலைபின்னலில் முதல் தகவல் அறிக்கைகளை பதிவேற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில் போக்சோ , பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்புடைய முதல் தகவல் அறிக்கைகளை பதிவேற்றாமல் தவிர்க்கலாம் எனவும் சென்னை போன்ற பெருநகரில் அந்தந்த காவல் மாவட்டத்தின் துணை ஆணையருக்கு அந்த அதிகாரம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறும், கவனக் குறைவும், அலட்சியமும் காவல்துறை தரப்பில் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு என்ன ஆனது? அவர் குறிப்பிட்ட சார் யார்? என அதில் உள்ள சந்தேகங்களை கேள்வி எழுப்பி பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளம் எந்த விதத்திலும் செய்திகளில் வெளிவராமல் தவிர்த்து உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பத்திரிக்கையாளர்களை விசாரணை என்ற பெயரில் அவமதிக்கும் படி நடந்து கொள்வதும், அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி இருப்பதும், இதனால் 15 நாட்களுக்குப் பிறகுதான் செல்போன்களை ஒப்படைப்போம் என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அதை விட, விசாரணை என்ற பெயரில் தனிப்பட்ட விவரங்களை கேட்பது, குடும்பம், சொத்து ஆகியவை குறித்து விசாரிப்பது, எஃப்ஐஆரை வைத்து எவ்வளவு பணம் பார்த்தீர்கள் என கேள்வி கேட்பதெல்லாம் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தும் செயல்.
இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்கள் பெரும்பாலும் குற்றப்பிரிவு செய்தியாளர்கள், முதல் தகவல் அறிக்கையை காவல்துறையின் வலை பின்னலில் சென்று பார்த்ததன் நோக்கம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது தானேயொழிய, மாணவியின் அடையாளத்தை வெளிபடுத்துவது அல்ல. அவ்வாறு வெளிபடுத்தவும் இல்லை.
அப்படியிருக்க பத்திரிக்கையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதற்கு பின்னால் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது.
காவல்துறை உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் சோர்ஸுகளாக இருப்பார்கள்.
பல வழக்குகளின் முக்கியமான தரவுகள் இருக்கும்.
அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுடனான சில முக்கியமான உரையாடல்களின் பதிவுகள் இருக்கும். இவற்றையெல்லாம் கைப்பற்றி பத்திரிக்கையாளர்களை மறைமுகமாக மிரட்டும் நோக்கமா என சந்தேகம் எழுகிறது.
பத்திரிகையாளர்களின் செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்துவதென்றால் அவர்கள் முன்னிலையில் பரிசோதித்துக் கொண்டு அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் மாறாக பறிமுதல் செய்து தடய அறிவியல் துறைக்கு அனுப்புவது ஏற்புடையது அல்ல.