அப்பாவி ஜனங்கள்
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி தான் மாறுகிறது. காட்சிகள் மாறுவதில்லை. கடந்த 2024 டிச., 23ம் தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனு அளிக்க வந்த ஒருவர், ‘தனுக்கு சொந்தமான இடம், போலி பட்டா வாயிலாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்த போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும். உரிய ஆவணங்களுடன் எட்டு ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கையில்லை, நடையாய் நடக்கிறேன்’ என, கூறி அதிகாரிகளை கண்டபடி ஒருமையில் திட்டி, தீர்த்த சம்பவம் அரங்கேறியது.
இது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறியபடி, எட்டு ஆண்டுகள் என்றால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலும் ஐந்து ஆண்டுகள் போராடியுள்ளார். தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மட்டும் தான் மாறுகிறது. காட்சிகள் மாறுவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். திண்டுக்கல்லில் மட்டுமல்ல, பல மாவட்டங்களிலும் இதே நிலை தான் உள்ளது.
தமிழக முதல்வராக 2021ல் பொறுப்பேற்ற ஸ்டாலின், பதவி ஏற்ற ஓராண்டுக்கு பின், ‘அரசாணை போட்டுவிட்டோம் என்பதால், அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்து விட்டதாக அர்த்தம் இல்லை. கால நிர்ணயம் செய்து, மக்களுக்கு திட்டங்களை கொண்டு செல்ல விரைந்து செயல்படுங்கள்’ என, அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
முதல்வரின் கட்டளையை அடுத்து, அப்போது தலைமை செயலராக இருந்த, இறையன்பு ஐ.ஏ.எஸ்., மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது:
முதல்வர் தனிப்பிரிவிற்கு தினமும் 10,000க்கும் மேற்பட்ட குறை தீர் மனுக்கள் வருகின்றன. பொதுமக்களின் குறைகளை மாவட்ட அளவிலேயே தீர்க்கப்படவேண்டும். மாவட்டம், வட்டம், வட்டாரம், சிற்றுார் அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை, உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதால், அவர்கள் கோட்டையை நோக்கி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரச்னைகளை, மாவட்ட அளவிலேயே, துரிதமாக தீர்க்க முனைய வேண்டும். முனைப்பாக செயல்பட்டால், அவர்கள் தலைமை செயலக கதவுகளை தட்ட வேண்டிய தேவை எழாது. தலைமை செயலரின் கடிதத்தை படிக்கிற அதே ஆர்வத்துடன், தத்தளிக்கும் அபலையின் மனுவை படிப்பதில், நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இலக்குகளை அடைவது மட்டுமல்ல; மக்கள் இதயங்களை குளிர்விப்பதும், அரசுப் பணியின் ஓர் அங்கமே. கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், மக்கள் காத்துக் கிடப்பதை பார்க்கும்போது மனம் கனக்கிறது.
அதிக மனுக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் மாவட்ட கலெக்டருக்கு கேடயங்கள் வழங்குவதை விட, தலைமை செயலகத்திற்கு, எந்த மாவட்டத்தில் இருந்து குறைவான மனுக்கள் வருகிறதோ, அந்த
நடைமுறையை கொண்டு வர உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
ஒருவர், மூன்று மாதங்களாகப் பட்டா மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியதும், ‘படபட’ வென பட்டா மாற்றம் நடந்தது. பட்டா பெற்றவர், படித்து பட்டம் பெற்றபோது கூட, அவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டார். ஏன், உயர் அதிகாரிகளுக்கு, மனுதாரர்கள் குறுஞ்செய்தி அனுப்பும் வரை, அவர்களை காக்க வைக்காமல், தகுதி அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியிருந்தார்.
தலைமை செயலர் எழுதிய கடிதத்தில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், பட்டா கேட்டு மூன்று மாதங்கள் அழைந்தவரை குறிப்பிட்டு இருந்தார். மூன்று வருடங்கள் ஆனாலும் வருவாய் துறை அதிகாரிகளை சந்திக்க நடையாய் நடக்கும் சம்பவங்கள் தற்போதும் அரங்கேறுகின்றன.
பட்டா உள்ளிட்ட பிற சான்றுகள் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகுமா. அதற்காக அதிகாரிகள் கால அவகாசம் எடுப்பது சரியா என, நமக்கு இருந்த சந்தேகத்தை வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி கூறியதாவது:
அரசு துறையில் எந்த வேலை என்றாலும், ‘செல்ப் மூவிங்’ இருக்காது. மனுதாரர்கள் பல முறை சென்று ‘பாலோ –அப்’ செய்தால் மட்டுமே பைல் மூவ் ஆகும். இல்லை என்றால் பணம் தரவேண்டும். குறிப்பாக வருவாய் துறையில் அப்படிதான். அதுவும் பட்டா பெயர் மாற்றம், நில அளவை போன்ற சொத்து விவகாரங்களுக்கு பணம் கொடுத்தால், மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள் வரை ஆகும் காலம், மூன்றே நாட்களில் கூட முடியும்.
அதுமட்டுமில்லாமல் மனுதாரருக்கு தேவையான ஆலோசனையும் வழங்கப்படும். இல்லை எனில் ஒரு போதும் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல, வருவாய் துறையில் இது உதாரணம் தான். வருவாய் துறை மட்டும் அல்ல பத்திரபதிவு துறை, ஊரக வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை என, பல துறைகளிலும் பல மாவட்டங்களில் இதுபோன்ற எத்தனையோ ‘சமாச்சாரங்கள்’ அரங்கேறி வருகின்றன.
ஸ்டாலின் போன்ற எத்தனை முதல்வர்கள் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டாலும் சரி, இறையன்பு போல எத்தனை அதிகாரிகள் கலெக்டருக்கு கடிதம் எழுதினாலும் சரி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவரவர் பொறுப்பு உணர்ந்து, கடமையை செய்தால் தான், தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-***
உதாரண சம்பவம்
நிலத்தின் வரைப்பட திருத்தத்திற்கு விண்ணப்பித்து மூன்று வருடங்களுக்கு மேல் நடையாய் நடந்து ‘சாதித்த’ ஒருவரது அனுபவம்:
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் திருநெல்வேலி தாலுகாவிற்குட்பட்ட சுத்தமல்லி கிராமத்தில் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்திற்கு கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க முயற்சி செய்கையில், அந்த இடத்தின் அளவிற்கும், பத்திரத்தில் உள்ள அளவிற்கும் மாற்றம் உள்ளது தெரிந்தது. வரைபடத்தில் அதை திருத்தம் செய்யவேண்டும் என, தெரிந்தது.
அவர் அதற்கான முயற்சியில் இறங்கி, 2019ல் திருநெல்வேலி சப்– கலெக்டருக்கு மனு அளித்துள்ளார். மனு நெல்லை தாலுகா அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அங்கிருந்து சர்வேயர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
பெண் சர்வேயர் தன் உதவியாளர்களுடன் வந்து இடத்தை ஆய்வு செய்தார். சர்வேயர் இடத்தை சுற்றி, ஒரு கிலோ மீட்டர் வரையில் அளந்தார். தங்கள் பத்திரத்தில் உள்ள அளவை விட, நிலத்தில் இடம் குறைவாக உள்ளது. தவறை சரிசெய்ய வேண்டும் என கூறிவிட்டு சென்றவர், அதற்கான கோப்புகளை தயார் செய்து வைத்தார். ஆனால் அதன் பின் எந்த வேலையும் நடக்கவில்லை. அவர் திருநெல்வேலியில் இருந்து கடலுாருக்கு மாறுதல் ஆகி சென்று விட்டார்.
பாதிக்கப்பட்டவர், நிலவரம் அறிய சர்வேயர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள தலைமை சர்வேயர் உதவியுடன், மீண்டும் கோப்புகள் துாசு தட்டப்பட்டன. மீண்டும் தாசில்தார், சர்வேயர், வி,ஏ,ஓ., உதவியுடன் நிலத்தை அளந்து சென்றனர்.
பின் தாசில்தார், சப்– கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். சப்– கலெக்டர் டி.ஆர்.ஓ., விற்கு பரிந்துரைத்தார். டி.ஆர்.ஓ., நில அளவை உதவி இயக்குனருக்கு அனுப்பினார். ஒரு வழியாக மூன்று ஆண்டுகளாக மனு தாரர் நடையாய், நடந்து, 2022ல் ஒரு வழியாக வரைப்படம் திருத்தம் செய்து வாங்கினார்.
மூன்று ஆண்டுகள் நடையாய் நடந்து, நொந்து போன அவர், தனக்கு வரைபட திருத்த ஆணை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன், அந்த இடத்தை விற்பனை செய்து விட்டார் என்பது வேறு கதை.
***
உடனடி தீர்வு வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆட்சி முடிய, இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தான் உள்ளன. தற்போது துணை முதல்வர் பொறுப்பில் உள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு வரும் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனுக்களை ஆராய்ந்து, மாவட்டந்தோறும் உள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து, லஞ்ச, லாவண்யம் இல்லாமல், மனுதாரர்களை வருட கணக்கில் அலையவிடாமல், தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Info whatsapp Recieved
***