இதற்கு யாருடைய செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை ?
அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விவரங்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றதும், அந்த அறிக்கை கசிந்ததும் குற்றம் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி அது உச்ச நீதிமன்றம் வரை வழக்காடப்பட்டு கசியவிட்டவர்களிடம் 25 லட்சம் ரூபாய் தண்டம் வசூலித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு அளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர், கசிய விட்ட காவல்துறை அதிகாரிகளின் செல்போன்களைப் பறிமுதல் செய்யாமல், பத்திரிகை ஊடகவியலாளர்கள் மூன்று பேரின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளது.
இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற கார் ஒன்றை திமுக கொடி உள்ள காரில் சில இளைஞர்கள் துரத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பத்திரிகைச் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள காவல்துறையினர் அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.
இது எந்தவகையில் நியாயம் ? இப்படி பெயர் அடையாளத்தை வெளியிட்டதற்காக யாருடைய செல்போன்களை காவல்துறை பறிமுதல் செய்து விசாரிப்பார்கள் ?
எனவே, தந்தி டிவி, புதியதலைமுறை, ஒன் இந்தியா ஊடகர்களிடம் பறிமுதல் செய்த செல்போன்கள் உள்ளிட்ட கருவிகளை உடனே திரும்பக் கொடுக்க வேண்டும் என்று இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் மீண்டும் வலியுறுத்துகிறது.
-க. அசதுல்லா, தேசியச் செயலாளர், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் – IFWJ, புதுடெல்லி. 30/1/25