“இரண்டு மாத இடைவெளியில் நாளை முதல் மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு”

 

தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றிட *மத்திய மாநில அரசுகளுக்கு அவசர கடிதம்.*

 

இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனம் கடந்த வாரம் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்திருக்கும் தருணத்தில் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சக்ரா, அர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஜனவரி மாதம் ஒவ்வொன்றாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தின.

 

இந்த நிலையில் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை கிளை பரப்பியுள்ள அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனமான வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் திருமலா பால் நிறுவனமும், பிப்ரவரி 3ம் தேதி முதல் ஜெர்சி பால் நிறுவனமும்  பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5.00ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 1லிட்டர் பாக்கெட் 70.00ரூபாயில் இருந்து 72.00ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும்,  நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 1லிட்டர் பாக்கெட் 62..00ரூபாயில் இருந்து 64.00ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 32.00ரூபாயில் இருந்து 33.00ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 1லிட்டர் பாக்கெட் 61.00ரூபாயில் இருந்து 62.00ரூபாயாகவும், 500மிலி பால் பாக்கெட் 27.00ரூபாயில் இருந்து 28.00ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட தயிர் (Toned Curd) 1கிலோ பாக்கெட் 70.00ரூபாயில் இருந்து 72.00ரூபாயாகவும், 450கிராம் பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிர் (Double Toned Curd) 1கிலோ பாக்கெட் 68.00ரூபாயில் இருந்து 70.00ரூபாயாகவும், 450கிராம் பாக்கெட் 33.00ரூபாயில் இருந்து 35.00ரூபாயாகவும் விற்பனை விலை மாற்றத்தை திருமலா பால் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இந்த விற்பனை விலை உயர்வுக்கு வழக்கமாக கூறும் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள் விலை உயர்வு என்கிற அதே பழைய பொய்யையே மறுபடியும் காரணமாக கூறி அதற்கான  அறிவிப்பை சுற்றறிக்கை வாயிலாக பால் முகவர்களுக்கு தெரிவித்துள்ளதை அடுத்து பிற தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை அடுத்த சில தினங்களில் உயர்த்த இருப்பதாக தகவல் வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதால் திருமலா பால் நிறுவனத்தின் தன்னிச்சையான போக்கினை வன்மையாகக் கண்டிப்பதுடன் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், திருமலா பால் நிறுவனத்தை தொடர்ந்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களையும் தடுத்த நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்   வலியுறுத்துகிறது.

 

ஏனெனில் கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் வரலாறு காணாத வகையில் பால் கொள்முதல் விலையை குறைத்திருந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை சிறிதளவு கூட குறைக்காத சூழலில் கொரோனா கால ஊரடங்கு முடிவிற்கு வந்து  அதன் பிறகு பால் வணிகம் சற்று சீரடையத் தொடங்கிய பின்னர் ஏற்கனவே குறைக்கப்பட்டிருந்த பால் கொள்முதல் விலையை மட்டும் கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி வந்திருந்தாலும் கொரோனா காலகட்டத்திற்கு முன்பிருந்த பால் கொள்முதல் விலையை விட தற்போது லிட்டருக்கு 3.00ரூபாய் குறைவாகவே அனைத்து தனியார் பால் நிறுவனங்களும்  கொள்முதல் விலையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

 

மேலும் கடந்தாண்டு (2024) நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையிலும் கூட அதுகுறித்து சிறிதளவு கூட கவலைப்படாத தனியார் பால் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு 2024 டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தின.

 

இயற்கை பேரிடர் சமயத்தில் பொதுமக்கள் அல்லல்பட்டு கொண்டிருந்த சமயத்திலேயே பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தியும் திருப்தியடையாத தனியார் பால் நிறுவனங்கள அடுத்த இரண்டு மாதங்கள் நிறைவடைவதற்குள்ளாக மீண்டும் ஒரு விற்பனை விலை உயர்வை அறிவித்திருப்பது மக்கள் விரோத செயலன்றி வேறில்லை.

 

இதற்கு காரணம் தமிழ்நாட்டில் தினசரி உற்பத்தியாகும் 2.25கோடி லிட்டர் பாலில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினின் பங்களிப்பு வெறும் 16% மட்டுமே (37லட்சம் லிட்டர் பால் கொள்முதல், 30லட்சம் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை) என்பதாலும், மீதமுள்ள 84% பங்களிப்பு கொண்ட தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரமோ, தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரமோ மாநில அரசிடம் இல்லாததும் தான் தனியார் பால் நிறுவனங்கள் கட்டுப்பாடின்றி செயல்பட காரணம் என்றால் அது மிகையாகாது.

 

16% பங்களிப்பு கொண்ட ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களையும், ஆவின் பாலினை பயன்படுத்தும் நுகர்வோரையும் மட்டுமே கவனத்தில் கொள்ளும் தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் 84% பங்களிப்பு கொண்ட அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களின் சர்வாதிகார போக்கினை கண்டு கொள்ளாமல் இருப்பதும், மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களையும், அந்நிறுவனங்களின் பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களை பயன்படுத்தும் நுகர்வோரையும் வஞ்சிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஏற்புடையதல்ல.

 

எனவே கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கான பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை  தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்வது போல் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும், நுகர்வோர் பால் விற்பனைக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும் அரசு நிர்ணயம் செய்திடவும், பால் கொள்முதல் விலையிலும், விற்பனை விலையிலும் தனியார் பால் நிறுவனங்கள் மாற்றங்கள் செய்வதாக இருந்தால் அரசின் அனுமதி பெற்ற பிறகே பால் கொள்முதல், விற்பனை விலை மாற்றத்தை அமுல்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து சிறப்பு சட்டம் இயற்றிடவும், தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி கண்காணிக்க பால் கொள்முதல், விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திடவும் வலியுறுத்தி மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜிவ் ரஞ்சன் சிங், இணையமைச்சர்கள் திரு. சிங் பாஹேல், திரு. ஜார்ஜ் குரியன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மின்னஞ்சல் வாயிலாகவும், பதிவு தபால் வாயிலாகவும் வியாழக்கிழமை (30.01.2025) பிற்பகலில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

*இணைப்பு :- பால் விற்பனை விலை உயர்வு சுற்றறிக்கை.*

 

*மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், பதிவுத் தபால் வாயிலாகவும் அனுப்பிய கடிதம்.*

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி

நிறுவனர் மாநில தலைவர்

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

*

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *