விழுப்புரத்தில் சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம்.

 

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் , 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த மாதம் 28 ஆம் தேதி நேரில் சென்று முதலவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் , சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் , வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி , காடுவெட்டி குரு அவர்களின் மகள் விருதாம்பிகை மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது , வன்னியர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசிற்கும் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது , அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வர் உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் , வன்னியர் சமூக மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் பேசியவுடன் , நிச்சயம் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் கூறியிருந்தார். அதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன் என்றார். அதே போல் , இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடுவெட்டி குரு அவர்களின் மகள் விருதாம்பிகை மற்றும் காடுவெட்டி மனோஜ் , இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதலமைச்சருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என கூறினர். மேலும் , வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்திருப்பதாகவும் அதை நிறைவேற்றி தருவதாக முதல்வர் கூறியுள்ளார் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மறைந்த காடுவெட்டி குருவுடைய பிறந்தநாள் விழாவிற்கு அனுமதி கேட்ட நிலையில் , அரசும் அனுமதி அளித்திருந்தது. அதே போல் காடுவெட்டி குரு அவர்களுக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு முதலவர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தோம் என தெரிவித்தனர்.

வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி அவர்களும் செய்தியாளர்களை சந்திக்கும் போது , வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்த தந்த முதலமைச்சருக்கு நன்றி என கூறினார்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *