நெல்லை புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவியருக்கு பைபிள் வழங்கிய விவகாரம் குறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்
நெல்லை புத்தகத் திருவிழாவில் இன்று காலை நெல்லைதிருத்து பகுதியில் இருந்து பார்வையிட சென்ற அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் இலவச பைபிள் வழங்கப்பட்டுள்ளது.
புத்தகத் திருவிழா அரங்க எண்1ல் இந்த பைபிள் புத்தகங்கள் வழங்கப்பட்டதாக குழந்தைகள் தெரிவித்தனர்.வீட்டிற்கு சென்றதும் இதை அறிந்த பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார்.
கடந்த மாதம் திருப்பூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பேசிய பேச்சாளர்கள் இந்து அமைப்புகள் குறித்து அவதூறான செய்திகளை மேடையில் பேசிய நிலையில் பிரச்சனை ஏற்பட்டு சாலை மறியல் போன்ற போராட்டங்கள் உருவானது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு இந்துமுன்னணி சார்பில் நெல்லை புத்தகத் திருவிழாவில் இதுபோல் பிரச்சனைகள் ஏற்படாது இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது தமிழக அரசு நடத்தும் நெல்லை புத்தகத் திருவிழாவில் நிறைவு நாளான இன்று ஏதுமறியாத அப்பாவி ஏழை சிறு குழந்தைகளிடம் பைபிள் புத்தகத்தை இலவசமாக கொடுத்து மதமாற்ற பிரச்சாரம் செய்துள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது
மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்காகவே புத்தக திருவிழா நடத்தப்பட்டு மாணவர்களும் அதற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
ஆனால் அங்கு வைத்து கிறிஸ்தவ மதமாற்ற புத்தகங்களை கொடுப்பது சட்டவிரோதமானது. புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அரங்கம் எண் ஒன்றில் மதமாற்ற பிரச்சாரம் புத்தகங்கள் கொடுத்தவர்களை புத்தக திருவிழாவில் இருந்து நிரந்தரமாக நீக்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதனை அனுமதித்து வேடிக்கை பார்த்த புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்துமக்கள் சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது.
தவறினால் இனி வரும் காலங்களில் இந்துமுன்னணி சார்பில் புத்தக திருவிழாவில் இந்து மத வழிபாட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
