சென்னையில் மாபெரும் 8-வது சித்த மருத்துவக் கண்காட்சி ‘நவரத்தினா 2025’ நிறைவு விழா.

சென்னை கிண்டியில் உள்ள பி.எம். பிர்லா கோளரங்க வளாகத்தில் எட்டாவது சித்த மருத்துவ தினக் கொண்டாட்டத்தின் தொடர் நிகழ்வாக மாபெரும் சித்தமருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தினால் பிப்ரவரி 1 முதல் 9 வரை நடத்தப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர் என். ஜெ முத்துக்குமார் தலைமையில் ஜி. தியாகராஜன் மதுக்குமார், தமிழ்நாடு தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறையின் நிர்வாக இயக்குனர்  ஐ.கே. லெனின் தமிழ்கோவன்  முன்னிலையில் வி. பானுமதி துவக்கி வைத்தார்.

சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த அடிப்படைத் தத்துவங்கள். சித்த மூலிகைகள், மருந்து மூலப் பொருட்கள், மருந்து செய்ய உதவும் கருவிகள், சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட அழகு சாதனப் பொருட்கள், சித்தர் உணவுகள், சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகங்கள் என சித்த மருத்துவத்தின் 9 அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இதர நிறுவனங்கள், சித்த மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிற்றுவிக்கும் பதினேழு கல்லூரிகள் பல்வேறு விதமான அரங்குகளில் சித்த மருத்துவத்தின் பலதரப்பட்ட அம்சங்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிகழ்வில் யோகப் பயிற்சிகள் பல்வேறு விழிப்புணர்வு சொற்பொழிவுகள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் நிகழ்த்தப் பெற்றன. பொது மக்களுக்காக இலவச சித்த மருத்துவ முகாம், இலவச இரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. தேவைப்பட்டோருக்கு வர்ம சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்பட்டது.

09 பிப்ரவரி 2025 மதியம் இக்கண்காட்சியின் நிறைவு விழா பி எம் பிர்லா கோளரங்க வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குனர் என்.ஜே. முத்துக்குமார் கண்காட்சியில் பங்கு பெற்ற கல்லூரிகள், மாணவர்கள் ஆசிரியர்கள், அதிர்ஷ்டப் பரிசு பெற்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்த ஒன்பது நாள் நிகழ்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஏறத்தாழ 15,000 பேர் கண்டு களித்தனர். ஆயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவ சிகிச்சையும், எண்ணூற்று இருபது பேருக்கு இலவச இரத்த பரிசோதனையும் செய்யப்பட்டன.

மேலும் துளசி, ஆடாதொடை நிலவேம்பு, மகிழம், தான்றி , வெட்டிவேர் உள்ளிட்ட 15 விதமான மூலிகை செடிகள் சுமார் ஒன்பதாயிரம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. சித்த உணவுகளான பஞ்சமுட்டிக் கஞ்சி, செம்பருத்தித் தேநீர், பானகம், மூலிகைத் தேநீர் போன்றவை தினந்தோறும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஒன்பது நாள் நிகழ்வாக நடந்த இந்த மாபெரும் சித்தமருத்துவக் கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *