ஈரோடு அருகே உள்ள சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த 40 வயதாகும் கோபால் வெல்டிங் பட்டறை தொழிலாளியாவார். இவருடைய மனைவி மணிமேகலா (28). இவர் சித்தோட்டை அடுத்த பசுவபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கோபால் மணிமேகலா தம்பதிக்கு கோகுல் (10), தமிழினி (7) என்ற 2 குழந்தைகள் இருக்கிறார்கள். கம்பெனியில் வேலை செய்து வந்த போதிலும், மணிமேகலா கல்யாண விழாக்களுக்கு சென்று கேட்டரிங் வேலை செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தன்னுடைய மனைவி மணிமேகலா கேட்டரிங் வேலைக்கு செல்வது கோபாலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.இதன்காரணமாக மணிமேகலா மற்றும் கோபால் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த மணிமேகலா, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, தனது கணவரை பிரிந்து, அந்த பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை பசுவபட்டியில் மணிமேகலா வேலை பார்த்து வந்த கம்பெனிக்கு கோபால் சென்றிருக்கிறார். பின்னர் அவர் மணிமேகலாவை தனியாக சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கெஞ்சி கேட்டுள்ளார், ஆனால் அதற்கு மனைவி வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மணிமேகலா மற்றும் கோபால் தம்பதி இடையே கம்பெனியிலேயே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலாவை சரமாரியாக குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சை்ககாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிமேகலா பரிதாபமாக உயிரைவிட்டார்.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிமேகலாவின் கணவர் கோபாலை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.