மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர் வாரணாசியில் உள்ள புனித ஹனுமான் படித்துறைக்குச் சென்று வழிபாடு செய்தனர். ஆன்மீக உணர்வுடன் அவர்கள் கங்கையில் புனித நீராடி, மகிழ்ச்சியும் செழிப்பும் வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். மரியாதைக்குரிய ஆச்சார்யர்களின் வழிகாட்டுதலைப் பெறும் அதிர்ஷ்டமும் மாணவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் தங்கள் ஞானத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், வாரணாசியில் உள்ள பல்வேறு படித்துறைகளின் வளமான வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு அவர்கள் எடுத்துரைத்தனர்.
கங்கையில் புனித நீராடியபின், அனைத்து விருந்தினர்களும் படித்துறையை ஒட்டியுள்ள பழங்கால கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். இந்த கோயில்களின் வரலாறு, தெய்வீகம், பிரம்மாண்டம் ஆகியவை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. இதையடுத்து ஹனுமன் படித்துறையில் உள்ள சுப்பிரமணிய பாரதியின் இல்லத்திற்குச் சென்ற தமிழ் விருந்தினர்கள், அங்கு அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினர். மாணவர்கள் பாரதியார் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் பல கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றனர். பாரதியின் வீட்டுக்கு அருகில் உள்ள நூலகத்திற்கும் சென்று அரிய தகவல்களை அவர்கள் சேகரித்தனர்.
பாரதியின் வீட்டிற்குச் சென்ற பிறகு, மாணவர்கள் குழு வாரணாசியில் உள்ள காஞ்சி மடத்திற்குச் சென்றது. அங்கு அவர்கள் அதன் வளமான வரலாற்றைப் பற்றி அறிந்து கொண்டனர். காசியில் உள்ள தென்னிந்திய கோயிலைச் சுற்றிப் பார்த்த இளைஞர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
பண்டிட் வெங்கட் ராமன் கணபதி, காசியும் தமிழகமும் ஆழமான – நீண்டகால உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று விளக்கினார். காசிக்கும் தமிழகத்துக்குமான இணைப்பு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பல்வேறு தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் காசியில் உள்ள ஹனுமான் படித்துறைப் பகுதி, கேதார் படித்துறைப் பகுதி, ஹரிச்சந்திரா படித்துறைப் பகுதி ஆகிய இடங்களில் மினி தமிழ்நாட்டைக் காணலாம் என்று அவர் கூறினார். இது இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது. ஹனுமன் படித்துறைப் பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் தமிழ்க் குடும்பங்களுக்குச் சொந்தமானவையாக உள்ளன. இந்த வீதிகளில்தான் ஒவ்வொரு நாளும் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது.