அஞ்சல் துறை சார்பில், வசந்த கால திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2025 பிப்ரவரி 10 முதல் 28 தேதி வரை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் உணர்வை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இந்த விழா உள்ளது.
இந்த விழாவின் முக்கிய கட்டமாக மத்திய அஞ்சல் மணடலம் சார்பில், அஞ்சல் ஊழியர்களுக்கு தோட்டக்கலை குறித்த பயிலரங்கு நடத்தப்பட்டது. மத்திய மண்டல் அஞ்சல் துறை தலைவர் டி. நிர்மலா தேவி பயிலரங்கிற்கு தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். சிறப்புரையில், ஊழியர்கள் அனைவரும் தோட்டக்கலை குறித்த சந்தேகத்தை, அந்த துறையை சேர்ந்த அலுவலர்களிடம் இருந்து கற்கும் வாய்ப்பாக இந்த பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். லால்குடி, தோட்டக்கலை உதவி இயக்குனர் டி. தனசேகர், மருங்காபுரி, உதவி தோட்டக்கலை அலுவலர் எஸ். பாக்கியராஜ் ஆகியோர் மூலம் இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.
இந்த பயிலரங்கில், மாடி, சமையலறை தோட்டம் அமைக்கும் முறைகள், அதற்கு தேவையான உபகரணங்கள், பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. இயற்கை முறையில் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை, வீட்டிலேயே கீரைகள்/காய்கறிகள் உற்பத்தி செய்யும் முறை குறித்தும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிலரங்கில் திருச்சி மண்டல அலுவலகம், திருச்சி கோட்டம், திருச்சி ரயில்வே அஞ்சல் கோட்டத்தினை சேர்ந்த உதவி இயக்குநர்கள், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்கள், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்கள், தபால் அதிகாரிகள், எழுத்தர்கள், தபால்காரர்கள், பன்முக திறன் பணியாளர்கள், உட்பட 150-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி முதுநிலை கோட்ட கண்கணிப்பாளர் பிரகாஷ், திருச்சி மண்டல அலுவலக உதவி இயக்குநர் பசுபதி ஆகியோர் செய்திருந்தனர்.