திராவிட மாடல் ‘ மோகம் கொஞ்சம் குறைந்து , அந்த இடத்தை இப்போது ‘ அப்பா ‘ மோகம் பிடித்துள்ளது.
இதுவரை பத்து நிமிடப் பேச்சில் இருபது முறையாவது திராவிட மாடல் இடம் பெற்று வந்தது. இப்போது அப்பா பெருமை சொல்லாத நாள் இல்லை என்றாகி விட்டது.
அம்மா என்ற வார்த்தை அன்பைப் பிரதிபலிப்பது. இயல்பானது. ஆனால் அப்பா என்று அன்னியர்களை அழைப்பது அப்படி இல்லை. ஏனோ தான் அப்படி அழைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். சரி, அழைப்பவர்கள் அழைக்கட்டும். அப்படி அழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வராமல் இருந்தால் சரி.
அண்ணன், அங்கிள் என்றழைக்கப்படும் வயது தாண்டி விட்டது. தாத்தா என்பது தோற்றத்துக்கு பொருத்தமாக இல்லை. ‘சார் ‘ என்று அழைத்தால் விபரீத அர்த்தம் வருகிறது. பின் என்னதான் செய்வது? அதனால், அப்பா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.
போகிற போக்கைப் பார்த்தால் , கூடிய விரைவில் திராவிட மாடல் ஆட்சி என்ற புகழுரை மறைந்து ‘ அப்பா ஆட்சி ‘ க்கு பாராட்டுகள் குவியும். அம்மா ஆட்சிக்கு ஆப்போசிட் அப்பா ஆட்சி என்ற புதிய வரலாறு உருவாகும்.
இன்றைய தினமலரில் பி.எம்.ஸ்ரீ. கல்வித் திட்டம் என்ற பெயர்தான் மாநில அரசின் எதிர்ப்புக்குக் காரணம் என்று ஒரு செய்தி வந்துள்ளது. உண்மையாக இருக்கலாம்.
தமிழகத்தில் மட்டுமாவது ‘ அப்பா கல்வித்திட்டம் ‘ என்று மாற்றிக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தால், மாநில அரசு ஏற்றாலும் ஏற்கலாம். பிரச்னை தீர்ந்து விடும் வாய்ப்புள்ளது. அரசுக்கு நிதியும் கிடைத்து விடும்.
மற்றொரு மொழிப் போராட்டம் வரப்போகிறது, நிதி தரா விட்டால் எப்படி வசூலிப்பது என்று எங்களுக்கு தெரியும். கெட் அவுட் மோடி என்று சொல்வோம்
-போன்ற விபரீத சவால்களிலிருந்து தமிழகம் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மத்திய அரசு பரிசீலிக்குமா? துக்ளக் சத்யா