செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் முகாம் தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது.

பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், கணக்குகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் உள்ளடங்கிய தாம்பரம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் தலைமை தபால் அலுவலகங்களிலும், குரோம்பேட்டை, பல்லாவரம், அம்பத்தூர், தொழிற்பேட்டை, திருவொற்றியூர், சேலையூர், தாம்பரம் கிழக்கு, காமராஜ் நகர், பூந்தமல்லி, பாடி, செங்குன்றம், வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மேடவாக்கம், போரூர், கொளத்தூர், மீஞ்சூர், முகப்பேர் ஆகிய துணை தபால் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடைபெறும்.

மேலும், பிப்ரவரி 28, மார்ச் 10 ஆகிய தேதிகளிலும் செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.  இந்நாட்களில் இந்த  தபால் அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250-ம், அதிகபட்சம் ரூ.1.5 லட்சமும் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.  இந்தத் திட்டக் கணக்கிற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.  வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-ன் படி, ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது.  பெண் குழந்தையின் 18 வயதில் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் உயர்கல்வி நோக்கங்களுக்காக கணக்கில் இருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம்.  கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது.  18 வயது நிரம்பியப் பின் (திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன் அல்லது 3 மாதங்களுக்குப் பின்) திருமணத்தின் போது கணக்கை முடித்துக் கொள்ளவும் வழி உள்ளது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *