தமிழக வெற்றிக் கழக ஆண்டு விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்துசென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியில அறிக்கையில்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (26.02.25) மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். விழா குறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அழைப்பும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த அடிப்படையில் அழைப்பின் செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் விழா நடைபெறும் அரங்கத்தின்று சென்றுள்ளனர். அப்போது அரங்கத்திற்குள் வரக் கூடாது பத்திரிகையாளர்களை பாதுகாப்பு என்று பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் (Bouncers) தடுத்துள்ளனர். தாங்கள் வந்துள்ள நோக்கத்தையும், அரங்கத்திற்குள் செல்ல வேண்டிய காரணத்தையும் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் விளக்கிக் கூறியுள்ளனர். இருந்தபோதும் பத்திரிகையாளர்களை அரங்கத்திற்குள் அனுமதிக்க மறுத்த அவர்கள், பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மார்பு மற்றும் முகத்தில் காயம்பட்ட குமுதம் செய்தி நிறுவனத்தை சேர்ந்த பத்திரிகையாளர் இளங்கோ நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கக் கூட தவெக நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை. உடனே சக செய்தியாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளை பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கு முயன்றுள்ளனர். ஆனால், நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் அவர்களை பாதுகாப்பதற்கு பணியமர்த்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்கள் மீது நடத்திய தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தவெக தலைவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.மேலும்
தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீதும் அதை கண்டிக்கக் கூட முன்வராத தவெக நிர்வாகிகள் மீதும் தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் களுக்கு நீதி கிடைக்க சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது