11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுதுங்கள்!
வைகோ வாழ்த்து
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு இன்று மார்ச் 3 ஆம் தேதியும், பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 05 ஆம் தேதியும் தொடங்குகிறது.
12ஆம் வகுப்புத் தேர்வினை 8,21,057 மாணவ – மாணவிகளும், 11ஆம் வகுப்புத் தேர்வினை 8,23,261 மாணவ – மாணவிகளும் எழுத உள்ளனர்.
கல்விக்கு தூண்டுகோலாகவும், உறுதுணையாகவும் இருக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்களின் அரவணைப்பில் நீங்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்ள இருக்கிறீர்கள்.
உங்களது வாழ்க்கைக்கும், உயர்கல்விக்கும் இப்பொதுத் தேர்வு அடித்தளமாக அமையும். ஆகையால் மன அமைதியுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வினை எழுதுங்கள். உரிய நேரத்தில் தேர்வு அறைக்குச் சென்றுவிடுங்கள். நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும்.
மாணவர்களின் உயர்கல்விக்காக புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு நடத்தி வரும் நமது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்.
பதற்றமின்றி, உற்சாகத்தோடு தேர்வுகளை எழுதி வெற்றிபெற மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
03.03.2025