சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பெண் சக்தி” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், துறை சார்ந்த மூத்த அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். #SheBuildsBharat என்ற செயலி வாயிலாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள், தில்லி காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள், மை பாரத் தன்னார்வலர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஆஷா பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். உலக வங்கி, யுனிசெப், ஐ.நா பெண்கள் அமைப்பு, யுஎன்டிபி., யு.என்.எஃப்.பி.ஏ போன்ற சர்வதேச அமைப்புகளின் பெண் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், வர்த்தகம், விளையாட்டு, ஊடகம், நிர்வாகம் பல்வேறு துறைகளிலிருந்து புகழ்பெற்ற பெண் தலைவர்கள் பங்கேற்கும் மூன்று தொழில்நுட்ப அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.