மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் புதிதாக 50,000 பேரை பணியமர்த்த திட்டம்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) 50,000 பேரை வரும் ஆண்டுகளில் புதிதாக பணியமர்த்த உள்ளதாக சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநர்  ராஜ்விந்தர் சிங் பட்டி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இணையப் பாதுகாப்பு, தரவு அறிவியல், விமானப் பாதுகாப்பு, போர்க்களம் ஆயுதங்கள் மற்றும் உத்திகள், ட்ரோன் எதிர்ப்பு தீர்வுகள், தீயணைப்பு மீட்பு உள்ளிட்ட துறைகளின் தொழில்நுட்ப நிபுணர்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். தேர்வு செய்யப்படும் நிபுணர்கள் நவீன பயிற்சி மேற்கொண்டு, சிஐஎஸ்எஃப்-ன் தொழில்நுட்ப பாதுகாவலர்களாக திகழ்வதோடு தேவைப்படுவோருக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்புப் படைகளில் சிஐஎஸ்எஃப்பில்தான் அதிக அளவில் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதில் பணியாற்றுவோரில் 8 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும், அண்மையில் அனைத்து மகளிர் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

56-வது நிறுவன தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜாதித்யா சோழன் சிஐஎஸ்எஃப் மண்டல தலைமையகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா வரவிருப்பதாக கூறினார். தக்கோலத்திலிருந்து காணொலி மூலம், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து இரு பிரிவாக புறப்படும் சைக்கிள் பேரணியை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக ராஜ்விந்தர் சிங் கூறினார்.

கடந்த 56 ஆண்டுகளாக சிஐஎஸ்எஃப் அதன் செயல் திறனை பல மடங்கு அதிகரித்து வளர்ச்சியடைந்திருப்பதாக அவர் கூறினார். தற்போது சுமார் 2 லட்சம் வீரர்களுடன் சிஐஎஸ்எஃப் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில், 68 விமான நிலையங்கள், தில்லி மெட்ரோ ரயில், 103 மின் உற்பத்தி நிலையங்கள், 18 அணுசக்தி நிலையங்கள், விண்வெளித் துறையை சார்ந்த 17 இடங்கள், 47 மத்திய அரசின் கட்டிடங்கள், 14 துறைமுகங்கள், 6 பாதுகாப்பு நிலையங்கள், 37 எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அலகுகள், 19 இரும்புத் தொழிற்சாலைகள், 10 நிலக்கரி சுரங்கங்கள் என்பன உள்ளிட்ட 359 முக்கிய இடங்களில் பாதுகாப்பு அளித்து வருகிறது. 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிஐஎஸ்எஃப்-ன் சிறப்பு பாதுகாப்புக் குழு பாதுகாப்பு வழங்கி வருகிறது. நாட்டின் 22 மாநிலங்களில் உள்ள 113 தீயணைப்பு நிலையங்களில், சிஐஎஸ்எஃப்-ன் சிறப்பு தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த சுமார் 9,000 பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.

சிஐஎஸ்எஃப் படைப்பிரிவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும், அந்தந்த பகுதியைச் சேர்ந்த 60 சதவீதம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், 10 ஆண்டுகள் பணி நிறைவுக்கு பின்னர், வீரர்கள் விரும்பும் இடங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் சிஐஎஸ்எஃப்-ல் 300 விளையாட்டு வீரர்களை கொண்ட சிறப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

2026-ம் ஆண்டு சிஐஎஸ்எஃப் மகளிர் மலையேற்றக் குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தை அடைவார்கள் என்று கூறிய அவர், தற்போது அந்தக் குழுவினர் உலகின் பல இடங்களில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

தினந்தோறும் சுமார் 1 கோடி பேருக்கு நாடு முழுவதும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கி வருகிறது. தில்லி மெட்ரோ ரயிலில் நாளொன்றுக்கு 75 லட்சம் பயணிகளுக்கும், விமான நிலையங்களில் 10 லட்சம் பயணிகளுக்கும், இதர தொழிற்சாலைகளில் 15 லட்சம் பேருக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளித்து வருகிறது.

தமிழ்நாட்டின் சிவகங்கை உட்பட நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் 16 சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள், சிஐஎஸ்எஃப் வளாகங்களில் நிறுவப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தென் மண்டல தலைமையக ஐஜி எஸ்.ஆர்.சரவணன் மற்றும் டிஐஜிக்கள்  ஆர் பொன்னி, அருண் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *