திருமாவளவன் பேச்சுக்கு ரா.சரத்குமார் கண்டனம்.

கச்சத்தீவின் சரித்திரம் தெரிந்து கொண்டு பேசுங்கள்
உண்மைக்கு புறம்பான செய்தியை
மக்களிடம் பரப்ப வேண்டாம்.

விசிக தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம்.

கச்சத்தீவை மீட்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு இருக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் மாநில அரசு மீது தவறு இருப்பதாக ஆளுநர் நாடகமாடுவதாகவும், விசிக தலைவர் திரு.திருமாவளவன் தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. கச்சத்தீவு விவகாரத்தில் ஏதுவும் தெரியாமல், புரியாமல் திருமாவளவன் பேசியிருக்கிறார். முதலில் கச்சத்தீவின் சரித்திரம் தெரிந்து கொள்ளுங்கள். 2026 தேர்தலுக்காக ஏதோ பேச வேண்டுமே என உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் பதிவு செய்வது முற்றிலும் தவறு.

1974ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சியும், திமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சியும் நடந்து கொண்டிருந்த சமயத்தில், அப்போதைய இந்திய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களால் தாரைவார்த்து கொடுக்கப்பட்டது தான் கச்சத்தீவு என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரியாவிட்டால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கச்சத்தீவு தாரை வார்க்கப்படும் போது, இங்கிருந்த திமுக அரசோ, அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களோ எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்த நிலையில், இந்தியாவின் ஒரு பிடி மண்ணையும் பாராளுமன்றத்தின் இரு சபைகளின் ஒப்புதல் இல்லாமல் கொடுக்க முடியாது என்ற சூழலிலும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.

நம் நாட்டின் முக்கிய பொருளாதார மண்டலம் பிற நாட்டிற்கு சென்றிருக்கிறது என்ற ஆதங்கம் கொஞ்சமாவது இருந்திருந்தால், இன்றளவும் தமிழ்நாடு அரசு வழக்கு தொடராமல், நீங்கள் கூட்டணி ஆட்சியில் பலவருடம் இருந்த போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் மெளனம் சாதித்தது ஏன்?

ஆக, 1974- ஜூன் 28ம் தேதி, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு உடந்தையாக இருந்த திமுகவின் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அவர்களே, இனி வரும் காலங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பாதீர்கள்.

இதனை தமிழக முதல்வரும், திமுக கூட்டணியில் இருப்பவர்களும் திறந்த மனதுடன் ஒப்புக்கொண்டு, கச்சத்தீவை மீட்கும் ஆர்வம் கொண்டிருந்தால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் சிறக்க வேண்டுமென அக்கறை கொண்டிருந்தால் அனைத்து கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு திரட்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் கோரிக்கையை முன்வைத்து அணுகுவதே சரியானதாக இருக்கும்.

நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்

ரா.சரத்குமார்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *