தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ‘₹’ என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை திமுக அரசு பயன்படுத்தி இருப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
இந்திய ரூபாய்க்கு தனி சின்னங்களை நமது தேசத்திலுள்ள 28 மாநிலங்களும் தங்களுக்கென தனித்தனியாக வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பித்தால், என்ன ஆகுமென்று சிந்தித்து பார்க்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களும், டாலருக்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவோம் என்று சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது.
அமெரிக்காவின் டாலர் மற்றும் பிற நாட்டு யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது போல இந்திய ரூபாய்க்கான தனி சின்னம் உருவாக்க கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 5 காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு, ஒரு பொது போட்டியை அறிவித்து பெறப்பட்ட 3,331 வடிவமைப்புகளில், ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் MLA திரு.மருதூர் N.தர்மலிங்கம் அவர்களின் மகன் திரு.த.உதயகுமார் அவர்கள் வடிவமைத்த புதிய குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்டு 15.07.2010 அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய ரூபாய்க்கு அடையாள குறியீடு வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியுடன் திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்ததுடன், மத்திய அமைச்சரவையில், தயாநிதி மாறன், S.S.பழனிமாணிக்கம், அ.ராசா, T.R. பாலு, S.ரகுபதி, K.வெங்கடபதி, V.ராதிகாசெல்வி ஆகிய 7 திமுக அமைச்சர்கள் ஆட்சியிலும் அங்கம் வகித்துள்ளனர் என்பதையும், தமிழ்நாட்டில் அப்போது கலைஞர் முதலமைச்சராக பதவி வகித்தார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போதே ஏன் திமுகவினர் இந்த அடையாள சின்னத்தை ஏற்றுக்கொண்டீர்கள்? தமிழை ஊக்குவிக்க “ரூ” எழுத்தை இப்போது பயன்படுத்துகிறீர்கள் என்றால், அன்று முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் அவர்களுக்கு தமிழ்மீது பற்று இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?
தேவநாகரி எழுத்தான Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டு, Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், ‘₹’ என்ற குறியீட்டால் இந்திய ரூபாயை குறித்து அதன் மேற்பகுதியில் உள்ள 2 கோடுகள் தேசியக்கொடியையும், சமம் என்ற அடையாளத்தையும் குறிப்பதாக தெரிவித்துள்ளார் உதயகுமார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதே, ரூபாயின் அடையாளச் சின்னத்தை மாற்றுபவர்கள் விரைவில் ரூபாய் நோட்டுகளையும் மாற்றும் திட்டம் கொண்டுள்ளார்களா? தமிழ்நாட்டை தனிநாடாக மாற்றும் எண்ணம் என்று இதை எடுத்துக் கொள்வதா?
மக்கள் நலனுக்கானது தான் அரசாங்கம். நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது தான் அரசாங்கம். மக்களின் தேவைகள் ஏராளம். ஆனால், தமிழ்நாடு அரசு மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு செயலாற்றுவது போல் தெரியவில்லை. அதை விடுத்து இன்று வாக்கு அரசியலுக்காக மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்ப்பு என்று சொன்னால் எப்படி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவீர்கள்? திமுகவின் இத்தகைய செயலை அதன் கூட்டணி கட்சியான தேசிய கட்சி காங்கிரஸும் சிந்திக்க வேண்டும்.
இந்த குறியீடுகளை மாற்றிவிட்டால் தமிழகத்தின் கடன் உயர்வதை தடுக்க முடியுமா? இதனால் மக்களுக்கு என்ன பயன்? இது மக்கள் நலன் காக்கின்ற செயலும் அல்ல. மக்களுக்கு நேரடியாக உதவுகின்ற செயலும் அல்ல. ஏற்கெனவே ஒப்புக்கொண்டு நடைமுறையில் உள்ள செயலை மாற்றுகிறீர்கள் என்று சொன்னால், வேறு எவற்றையெல்லாம் மாற்ற எண்ணம் இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்தால், உங்கள் மனநிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டை, தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்
ரா.சரத்குமார்