*”அதிகாரிகளின் மெத்தனம், பேராசையால் ஆவினுக்கான பால் கொள்முதல் வீழ்ச்சி, கையிருப்பில் உள்ள பால் பவுடர் விற்பனை, அரசு சாட்டையை சுழற்றுமா..? அல்லது முறைகேடுகளுக்கு துணை போகுமா..?”*
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே தமிழ்நாட்டிலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பாலுற்பத்தி சரிவடையத் தொடங்கியிருப்பதால் ஒவ்வொரு தனியார் பால் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதலை தக்க வைத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி வழங்குவதோடு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் தந்து வருகின்றன.
ஆனால் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினோ அதற்கு நேர்மாறாக செயல்பட்டு பால் கொள்முதலை கோட்டை விட்டு வருவதோடு, கையிருப்பில் உள்ள பால் பவுடரை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் இணையதள விற்பனை பிரிவின் NCDFI eMarket மூலம் விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி திருச்சி (உற்பத்தி ஈரோடு ஒன்றியம்) மாவட்ட ஒன்றியத்தில் உள்ள சுமார் 150மெட்ரிக் டன் பால் பவுடரையும், திண்டுக்கல் (உற்பத்தி மதுரை ஒன்றியம்) மாவட்ட ஒன்றியத்தில் உள்ள சுமார் 100மெட்ரிக் டன் பால் பவுடரையும் வரும் 17.03.2025அன்று விற்பனை செய்யும் (eAuction) முயற்சியில் இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உடன் ஆவின் அதிகாரிகள் இதே போன்று கையிருப்பில் இருந்த பால் பவுடர் மற்றும் வெண்ணெய் அனைத்தையும் தனியாருக்கு NCDFI eMarket மூலம் தாரை வார்த்ததின் விளைவினால் தமிழ்நாட்டில் பாலுற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் அண்டை மாநிலங்களின் தனியார் பால் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆவினுக்கான பால் கொள்முதலை சேர்த்து கவர்ந்த காரணத்தினால் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை ஆவினுக்கு சோதனை மிகுந்த காலகட்டமாக இருந்ததோடு பால் கொள்முதல் படுபாதாளத்தில் வீழ்ச்சியடைந்து கிடந்தது. இதனால் கலப்படத்திற்கு பெயர் பெற்ற மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் வாங்கும் முயற்சியில் ஆவின் அதிகாரிகள் ஈடுபட்டதால் ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதோடு அந்த காலகட்டத்தில் ஆவின் பாலின் தரமும் மிகவும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே நடந்த தவறுகளில் இருந்து கொஞ்சம் கூட தற்போது வரை பாடம் கற்றுக் கொள்ளாத ஆவின் அதிகாரிகள், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) உள்ளிட்டோரின் அலட்சியமான, பேராசையான சுயநலமிக்க செயல்பாடுகளால் ஆவினுக்கான பால் கொள்முதல் தமிழ்நாடு முழுவதும் கடும் சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மதுரை மாவட்டத்தில் மட்டும் தினசரி 1.75லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் நடைபெற்று வந்த நிலையில் அதில் 55ஆயிரம் லிட்டர் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மதுரை ஆவினுக்கு தற்போது தினசரி பால் கொள்முதல் 1.20லட்சம் லிட்டர் என்கிற நிலைக்கு வந்து விட்டது. இதே நிலை தொடருமானால் பொதுமக்களுக்கு மதுரையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி ஆவின் பால் விநியோகம் செய்வது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அத்துடன் இன்னும் ஒருசில வாரங்களில் மீண்டும் கலப்படத்திற்கு பெயர் போன வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் வாங்க வேண்டிய நிலை ஆவினுக்கு ஏற்படும் என்பதிலும், அதன் காரணமாக ஆவின் பாலின் தரம் மோசமடைவதோடு, ஆவினுக்கு மிகப்பெரிய நிதியிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய பால் மற்றும் தயிர் விலையை பெட்ரோலிய பொருட்கள் போல மாதந்தோறும் உயர்த்திக் கொண்டே போவதால் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. அத்துடன் தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் தங்களின் வீட்டிலேயே தயிர், மோர் தயார் செய்ய பாலின் தேவையும் கூடுதலாக தேவைப்படும். ஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டிய ஆவின் திட்டமிடல், விற்பனை பிரிவு அதிகாரிகள், மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் துனை ஆணையர் எந்த வித திட்டமிடுதல் இல்லாமல் செயல்பட்டு வருவது தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிப்பது போலவும், தனியோரோடு மறைமுக கூட்டு வைத்து செயல்படுவது போலவும் அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி பொதுமக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் ஆவின் நெய், பனீர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களை கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்டுகள், இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கு மொத்தமாக கொடுத்து விட்டு பால் முகவர்கள் நடத்தும் FRO (Franchisees Retail Outlets) ஆவின் பாலகங்களுக்கு அவற்றை வழங்காமல் விற்பனை ஆகாமல் தேக்கமடையும் பொருட்களை கட்டாயப்படுத்தி விநியோகம் செய்வதன் மூலம் ஆவினை வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்று விடலாம் என ஆவின் இணைய விற்பனைப் பிரிவு அதிகாரிகள், பொது மேலாளர் முதல் உதவி பொது துணை மேலாளர்கள் வரை எந்த வித ஈடுப்பாடும் இல்லாமல் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.
எனவே தற்போதைய சூழலில் கடும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆவினுக்கான பால் கொள்முதலை சரிவில் இருந்து மீட்கவும், அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் பால் உற்பத்தியாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்திடவும் தொலைநோக்கு சிந்தனையோடு பால்வளத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர், ஆவின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் தூங்கி வழியும் பால்வளத்துறை மற்றும் ஆவின் இணைய அதிகாரிகள் சுறுசுறுப்புடன் செயலாற்ற சாட்டையை சுழற்றியடிக்க வேண்டும். இல்லையெனில் ஆவினுக்கான பால் கொள்முதல் மட்டுமல்ல ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையும் படுபாதாளத்திற்கு சென்று விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
*இணைப்பு :- NCDFI eMarketல் ஆவின் Auction Notice.*
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனர் மாநில தலைவர்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்