தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் : வெளிவராத சில பகீர் தகவல்கள்
பல்வேறு சர்ச்சைகள், தடங்கல்களுக்கு இடையே கடந்த ஏழாம் தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது.
இதில் அனைத்து திருப்பணிகளும் உபயதாரர்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டது. அரசு தரப்பு அதாவது அறநிலையத்துறையிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை.
கோபுரம் புனரமைப்பு செய்ய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபரும் கல்வியாளருமான வசந்தகுமார்
அம்மன் சன்னதி தளங்கள், விமானத்தளம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு பழங்கால முறைப்படி கற்கள் பதிக்கப்பட்டு செம்மைப்படுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான டி எஸ் ஆர் வேங்கடரமணா குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து நேரடியாக பணிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள்
50,000 பேருக்கு மேல் தலை வாழை இலை போட்டு அன்னதானம் செய்திருக்கிறார் சிவகாசியைச் சேர்ந்த வைரவ நாதன் குழுவினர்
இப்படி ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு அன்பர்கள் பெருந்தொகை நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.
அதான் எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சாச்சே..
அதுக்கு என்ன இப்ப. ?
யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் ? இதில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்ற விவரம் கோயில் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. அதாவது ஒரே வேலைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து நன்கொடை பெறபட்டதாக டாக் உள்ளது
புனரமைப்பு பணிகளில் நிர்வாக முறைகேடு நடந்துள்ளது . பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மணல் வெட்டி அள்ளப்பட்டுள்ளது, பல பச்சை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டிருக்கிறது என்பது போன்ற புகார்களின் அடிப்படையில் தான் கோவில் நிர்வாக அலுவலர் முருகன் திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார்.
கோவில் அர்ச்சகர் ஒருவருக்கும் இந்த முறை கேட்டில் தொடர்பு இருக்கிறதாக சொல்லப்படுகிறது.
இப்போதைக்கு முறைகேடுகளை ஒதுக்கி விடுவோம்.
அது என்னென்ன என்பது பின்னர் தானாக தெரிய வரும்
உபயதாரர்களுக்கு கோவில் தரப்பிலிருந்து என்ன மரியாதை அளிக்கப்பட்டது.?
ஒரு மஞ்சப் பையில் ஆளுக்கு ஒரு தேங்காய் மூடியும் இரண்டு கதலிப்பழம் வெத்தலை பாக்கு தவிர வேறு எதுவும் வழங்கப்படவில்லை. (அதுவும் கும்பாபிஷேக பிரசாதம் (?) என்று கும்பாபிஷேகத்திற்கு முந்தைய தினமே வழங்கப்பட்டது தனிக் கதை)
நன்கொடையாளர்கள் கும்பாபிஷேகத்திற்கு பின்னர் முறையாக கௌரவிக்கப்பட்டு இருக்க வேண்டும் அது நடக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இன்னார் இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார் என்று தெரிந்து விடும் என்று முதல் நாளே சிறப்பு !? செய்தார்களோ என்னவோ ?
குறைந்தபட்சம் அவர்கள் பெயரை குறிப்பிட்டு கோவிலில் எங்காவது ஓரிடத்தில் ஒரு பிளக்ஸ் போர்டாவது வைத்திருக்கலாம்.
1990 ல் டாக்டர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் புதிய ராஜ கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட போதும், மீண்டும் அவரது தலைமையில் 2006ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட போதும் விழா நடத்தப்பட்டு உபயதாரர்கள் முறையாக கௌரவிக்கப்பட்டனர்
இப்போது நடந்த திருப்பணிகளுக்கு ஒரே வேலைக்கு பலர் நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் அதில்தான் பெருமளவு நிர்வாக முறைகேடு நடந்திருக்கிறது. ஏராளமான நன்கொடை யாளர்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை . அதனால் தான் நன்கொடை அளித்தவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று குமுறுகிறார்கள் பக்தர்கள்.
கோவிலில் புனரமைப்பு பணிகள் முறையாக நடக்கவில்லை. நிர்வாக முறைகேடு நடந்திருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கும்பாபிஷேகம் நடத்த முதலில் தடை விதிக்கப்பட்டது. மறுநாள் நடந்த விசாரணையில் தடை விலகிக் கொள்ளப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை ஐஐடி நிபுணர் குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையராக மூத்த வழக்கறிஞர் ஆனந்தவல்லி நியமிக்கப்பட்டு கடந்த 18ஆம் தேதி அவர்கள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்கள்
இன்று (21ம் தேதி) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முறைகேடுகள்
தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.
கூடவே உபயதார்கள் யார் யார்? அவர்கள் கொடுத்த நன்கொடை எவ்வளவு அதில் மேற்கொண்ட பணிகள் எவ்வளவு என்று விவரம் பகிரங்கமாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கும்பாபிஷேகம் நடந்த விதமே திருப்திகரமாக இல்லை. ஏனோ தானோ என்றுதான் நடத்தப்பட்டிருக்கிறது என்பதுவும் பக்தர்களின் வேதனைக் குரலாக ஒலிக்கிறது..
நடப்பதை எல்லாம் அம்பாள் லோகநாயகி, பாலமுருகன் சகிதமாக புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் காசி விஸ்வநாதர்..
தெய்வம் நின்று கொல்லும்..என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கும்பாபிஷேகம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் வாட்ஸ் அப்பில் இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது