வெள்ளங்குளியில் வீச்சரிவாளுடன் வீறுகொண்டு எழுந்தார்!
கோவில் கொடை விழா என்றாலே கிராம மக்களுக்கு கொண்டாட்டம் தான். நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சீவலப்பேரி, ஊர்காடு, வெள்ளங்குளி, பொழிக்கரை, கலந்தபனை, கயத்தாறு, திருச்செந்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுடலை மாடசாமி கோவில்களில் செவ்வாய் கிழையும், வெள்ளங்குளி, வீரவநல்லுார், புதுக்குடி, கீழப்பாவூர், திருமலையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கருப்பசாமி கோவில்களில் வெள்ளிக்கிழமையும் கொடை விழா நடத்தப்படுகிறது.

இக்கோவில்களில் உள்ள உக்கிர தெய்வங்கள் பீடங்களாகவே உள்ளன. கொடை விழாவின் போது மட்டும், பரிவார தெய்வங்களான வண்ணாரமாடன், விடுமாடன், முப்பிலிமாடன், பன்றிமாடன், சப்பாணிமாடன், சிவனைந்த பெருமாள், பேச்சியம்மன், பிரம்மராச்சியம்மன் மற்றும் வாகனங்களான குதிரை, நாய் போன்ற உருவங்களை தத்ரூபமாக வடிவமைக்கும் பணி முடித்து, பீடங்களின் முன் வைப்பர். அங்கு வண்ணம் நிறைந்த அட்டை தட்டிகள், பூக்கள் கொண்டு அலங்கரிக்கின்றனர்.

காவல் தெய்வங்கள் அதிகமுள்ள தென் மாவட்டங்களில் கோவில் கொடை விழாவிற்கு உருவாக்கப்படும் தெய்வ உருவங்கள் மிரட்டும் தோற்றத்தை தந்தாலும், அத்தகைய தெய்வ உருவங்களை மனிதர்கள் தான் படைக்கின்றனர்.

பளபளக்கும் வீச்சரிவாள், மிரட்டும் மீசையுடன் வெள்ளை குதிரையில் வேங்கை போல பாயும் கம்பீரமான சுடலை மாடசுவாமி, பரிவார தெய்வங்களான பேச்சியம்மன், பிரமாட்சியும் சுடலையோடு இணைந்து காட்சி தருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, வெள்ளங்குளி சுடலைமாட சுவாமி கோவிலில் கடந்த ஆக.5ம் தேதி செவ்வாய் கிழமை கொடை விழா சிறப்பாக நடந்தது. முன்னதாக 4ம் தேதி மாலை 5 மணியளவில் கருப்பசாமி கோவிலில் இருந்து சுடலை மாட சுவாமி, தன் கம்பீரமான தோற்றத்தில் கையில் பளபளக்கும் வீச்சரிவாளுடன் வீறுகொண்டு எழுந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்றார்.

கன்னடியன் கால்வாய் கரையோரம் மேட்டு பகுதியில் அமைந்துள்ள சுடலை மாடசுவாமி கோவிலில் இரவு 7 மணி முதல் திருவிழா துவங்கியது. ஆயிரக்கணக்கான டன் ரோஜா, செவ்வந்தி மாலைகளால் சுடலை மாடன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நுாற்றுக்கணக்கான ஆடுகளை (பன்றிகளும்) பக்தர்கள் நேர்த்தி கடனாக விட்டிருந்தனர்.

நடு நிசியான நள்ளிவு 12 மணியளவில், ‘‘கோட்டையை விட்டு, வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி’’ என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒழிக்க, சாமியாடி மண்டை ஓடு எடுக்க, கையில் திருநீர் கோப்பையுடன் மயானத்திற்கு சென்றார். அதிகாலை 3 மணியளவில், மண்டை ஓட்டுடன் ஆக்ரோஷமாக திரும்பிய சாமியாடிக்கு கனியன் மேளம், தாளம் முழுங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சுடலை மாடன் சன்னிதிக்கு முன் பரனில் தயாராக இருந்த பன்றி, ஆடுகள் பலியிடபட்டன.
தொடர்ந்து 4 மணியளவில் சுடலைக்கு படையல் போட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு படப்புசோறு பிரசாதமாக வழங்கபட்டது. காலை 10 மணியளவில் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிந்தது. ஏற்பாடுகளை வெள்ளங்குளி யாதவ சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

இந்த திருவிழாவிற்கு, உறவினர்கள், நண்பர்கள் யாரையும் குறிப்பிட்டு அழைப்பது இல்லை. தகவல் தெரிந்து கொண்டு தாமாகவே, செவ்வாய் கிழமை இரவு 7 மணிமுதல் பக்தர்கள் வருவதுண்டு. சுற்று வட்டார பகுதிகளான அம்பாசமுத்திரம், கடையம், கல்லிடைக்குறிச்சி, திருமலையப்பபுரம், உப்பாணிமுத்துார், வீரவநல்லுார், புதுக்குடி, பத்தமடை, சேரன்மகாதேவி, திருநெல்வேலி, சுத்தமல்லி, முக்கூடல் போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். புதன்கிழமை காலை 6 மணிக்கு திருவிழா முடிந்து சென்றனர். இப்படியாக 100 ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டுக்கு ஒரு முறை நடந்த திருவிழா தற்போது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து நடக்கிறது. அடுத்த கொடை விழாவில் சுடலையை மீண்டும் சந்திப்போம்.
ஆக்கம் மா.நடராஜன்
