பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவி லில் பாலாலயம் நடைபெற்றது. அதன் பின்னர் 2 ஆண்டுகள் ஆகியும் திருப்பணிகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று முன்தினம் இக்கோவிலுக்கு வந்தார். அப்போது அங்குவந்த பக்தர்கள் கோவில் திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது . எனவே திருப்பணிகளை தொடங்கி கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.
ஆலய அர்ச்சகர் ஆனந்தன் அமைச்சரிடம் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் குறித்து விளக்கினார்
இதையடுத்து உடன் வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் திருப்பணிகளை விரைந்து தொடங்கி 2 மாதத்திற்குள் முடித்திட வேண்டுமென அமைச்சர் உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அமைச்சருடன் வந்திருந்தனர்.
