மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்…
கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றிற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்..
இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு தினம்தோறும் உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் மழைக்காலங்களில் மழையால் ஏற்படும் வெள்ளங்களால் கோயில்கள் மிகவும் பாதிப்படைகின்றன.. கோயில் உள்ள கருவரை வரை மழைநீர் தேங்கி நிற்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் கோயிலில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் தஞ்சாவூரில் உள்ள சக்கராபள்ளி சக்கரவாகீஸ்வரர் கோவில் கருவறைக்குள் தண்ணீர் தேங்கியிருந்ததை கண்ட பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல் ஒரு மணி நேர மழைக்கே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றி மழை நீர் தேங்கி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கழிவுநீர் தேங்கி கிடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயில்களில் இத்தகைய அவல நிலையால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை அரசுத்துறை உணரவில்லை.
இந்த நிலைக்கு தமிழக பொதுப்பணித்துறையின் மெத்தன போக்கே காரணம்.
கோயில் பகுதியில் சாலை அமைக்கும் போது ஏற்கனவே போடப்பட்ட சாலை மீதே பொதுப்பணித்துறையினர் மேம்போக்காக சாலை போட்டு செல்கின்றனர். இதனால் சாலையின் உயரம் அதிகமாகி கோயில் பள்ளத்தில் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகிறது.
பொதுவாக சாலை போடும்போது ஏற்கனவே உள்ள சாலைகள் மீது ஒரு அடிக்கு கீழே பள்ளங்கள் தோண்டி அந்த சாலைகள் செப்பனிட வேண்டும் என்பது விதி. ஆனால் பொதுப்பணித்துறையினர் அப்படி செய்வதில்லை. இதனால் கோயில் பகுதிகளில் சாலை உயரமாகும் கீழே கோயிலும் உள்ளதால் மழைக்காலங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கோயிலுக்கு உள்ளே வந்து கோயில் கருவறை வரை தேங்கி நிற்கின்ற அவலம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதை கோயிலை தன் கைகளில் வைத்துக் கொண்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்வதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல், கோயிலை வியாபார தளமாகவே பார்ப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சகத்திடம் பேசி மழைக் காலங்களில் தொடர்ந்து தமிழக கோயில்களில் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி நிற்கும் அவல நிலையை போக்க முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழக அரசர்கள் கட்டிய கோயில்களில் அந்தக் காலத்திலேயே நீர் மேலாண்மை மூலமாக கோயிலில் பெய்யும் மழை நீர் வெளியேற்ற, மழை நீர் வடிகால் அமைத்து அந்த மழை நீரை குளத்திற்கு செல்லும் படியாக நீர் கால்வாய்கள் கட்டி உள்ளனர்.
தற்போது பல கோயில்களும் கோயில் குளங்களும் ஆக்கிரமிப்பில் உள்ள காரணத்தினாலும் கோயில்களில் பெய்யும் மழை நீர் வெளியேற முடியாமல் கோயில்களுக்கு உள்ளே தேங்கி நிற்கிறது.
ஆகவே இந்து சமய அறநிலையத்துறை தமிழக கோயில்களை சுற்றியும் கோயில் குளங்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோயிலின் புனிதத்தை காக்க போர்கால நடவடிக்கையாக செயல்பட வேண்டும் என இந்து முன்னணி அறிவுறுத்துகிறது!!
